×

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

மறந்து விட்ட மூக்குக் கண்ணாடி!

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

அன்றைய தினம் எனக்குக் கடுமையான தலைவலி. வெளியூர் ஒன்றுக்கு சென்று திரும்பியிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தானே போகிறோம், மூக்குக் கண்ணாடி எதற்கு என்று அவசரத்தில் கிளம்பி விட்டேன். நாற்பது வயதைக் கடந்து விட்டதால் வாசிப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் முன்பே எனக்கு வந்து விட்டது. சென்ற இடத்தில் மொபைல் ஃபோனில் வந்திருந்த ஒரு மருத்துவ அறிக்கையைப் படிக்க வேண்டிய சூழல்.

பின் யாரோ கேட்டார்கள் என்று சில தொடர்பு எண்களையும் அலைபேசியிலிருந்து எடுத்துக் கொடுத்தேன், கூடவே நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தைத் தர, அதையும் லேசாகப் புரட்டிப் பார்த்தேன். இவ்வளவையும் கண்ணாடி இல்லாமல் செய்ததால் தலைவலி வந்துவிட்டது போலும். கூடவே இன்னும் சில சந்தேகங்களும் கூட. ‘வெயில் ஜாஸ்தியா இருந்ததே, அதனால இருக்குமோ? தண்ணி பாட்டில் காலி ஆயிடுச்சு.. நீர்ச்சத்து கம்மியாகி அதனால தலைவலி வந்திருக்குமோ?’ என்றும் எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். கூடுதலாக அன்று சாலைகள் வேறு படுமோசமாக இருந்தன. அதனால் கழுத்து எலும்பில் உராய்வு ஏற்பட்டு தலைவலி வந்திருக்கலாம் என்றும் ஒரு அனுமானம்.

மருத்துவராக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. தனக்கு ஏதாவது உடல் நலக் குறைவு வந்தால், அந்த நோயைப் பற்றி படித்துத் தெரிந்து கொண்டதும், அனுபவத்தில் பார்த்ததும் கண் முன்னால் வந்து போகும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அந்த நோயின் அறிகுறி குறைந்த பின்பே பொறுமையாக சிந்திக்க முடியும். அன்றைய தினமும் தலைவலிக்கு என்ன காரணமாக இருக்குமோ என்று ஏகப்பட்ட குழப்பம் எனக்கு.

கண்பார்வைக் குறைபாடுகளைப் பொருத்தவரை பெரும்பான்மையானவர்களுக்கு தலைவலிதான் முக்கியமான அறிகுறி. பள்ளி செல்லும் காலத்தில், நிறைய படிக்க வேண்டியதாக இருக்கும். அந்தப் பருவத்தில் அடிக்கடி தலைவலி வருகிறது, அதுவும் குறிப்பாக மாலை நேரத்தில் வருகிறது என்று ஒரு மாணவர் சொன்னார் என்றால் அதற்குக் கண் பார்வைக் குறைபாடு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். ஒரு மாணவன் இப்படித்தான் ஒரு வாரமாக தலைவலிக்கிறது என்ற அறிகுறியுடன் வந்திருந்தான்.

பரிசோதனை செய்ததில் -1.5 DSph அளவிலான கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருந்தது. அதை விளக்கி, ‘சிறுவயதிலிருந்தே இவனுக்கு இந்தத் தொந்தரவு இருந்திருக்கலாம், தற்சமயம் பார்வைக் குறைபாடு லேசாக அதிகரித்திருக்கலாம்’ என்று அவனது பெற்றோரிடம் கூறினேன்.”அது எப்படி? இதுவரைக்கும் இவன் தலைவலிக்குதுன்னு சொன்னதே இல்லையே?” என்றார்கள். ஒரு கணம் அவனது உயரத்தையும் வளர்ச்சியையும் கணக்கிட்டேன்.

அவனது உடைகள் சற்றே சிறியதாக இருந்தன, ‘‘சமீபமா வேகமா வளந்துட்டானா?” என்று கேட்டேன். ‘‘ஆமா!” என்றார்கள். ‘சிறுவயதில் மிக லேசான பார்வைக் குறைபாடு இருந்திருக்கலாம். ஒருவேளை மூன்று வயதிலோ, நான்கு வயதிலோ பரிசோதித்திருந்தால் -0.50 Dsph என்ற அளவில் இவனுக்கு கண்ணாடி போட வேண்டியதாக இருந்திருக்கலாம். சிறுவன் வளர வளர அது லேசாக உயர்ந்திருக்கலாம். தற்பொழுது இவன் வேகமாக வளர நேரும் போது கண்ணின் அளவும் வேகமாக வளரும். அதனால் அணிய வேண்டிய கண்ணாடியின் பவரும் சட்டென்று கூடியிருக்கலாம்’ என்றேன்.

கண் மருத்துவத்தில் விழி ஒளி பரிசோதனை குறித்த சிறந்த புத்தகம் Duke and Elder. Refracion பாடத்தின் அரிச்சுவடி போன்ற இந்த நூலில் ‘Myopia is the price we pay for education’ என்று போட்டிருப்பார்கள். அதாவது பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் தலையைக் குனிந்த வாக்கிலேயே வைத்திருந்து படிப்பதால், புவி ஈர்ப்பு விசை காரணமாக ஒரு நபரின் கண் பந்தின் நீள அகலம் அதிகரிக்கக் கூடும் என்பதே இதற்குப் பொருள். அறிவியல் ரீதியான ஆய்வுகள் எதுவும், ‘இத்தனை ஆண்டுகள், நாளொன்றுக்கு இத்தனை மணி நேரம் படித்தால், கண் பந்தின் நீளம் இவ்வளவு வளரும்’ என்ற ரீதியில் இருக்கிறதா என்றால் இல்லை.

ஆனால் தர்க்க ரீதியாக அது சாத்தியமே. ஏற்கனவே அலைபேசி பயன்படுத்தும் குழந்தைகள் பற்றி பெற்றோருக்கு ஏகப்பட்ட கவலைகள். இதையும் வெளிப்படையாகக் கூறிவிட்டால் புத்தகம் படிப்பதற்கும் தடை வந்துவிடலாம். இன்றைய போட்டி யுகத்தில், அதிகபட்சமாக அரை மில்லி மீட்டர் அளவிற்கு கண் பந்து நீளம் அகலமாகலாம் என்ற ஒரு theory காரணமாக படிக்காமல் இருக்க முடியுமா?

அதனால், ‘‘வளரும் பொழுது, நிறைய படிக்க வேண்டி இருக்கும் பொழுது லேசாக பவர் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதனால் தற்சமய நிலைமைக்கு ஏற்ற கண்ணாடியை அணிய வேண்டும். எப்படி ஒரு சிறுவன் வளர வளர சிறுவயதில் வாங்கிய உடைகள் பொருந்துவதில்லையோ, அதே போல கண்பந்தின் அளவு மாற மாற அதற்கேற்ற கண்ணாடியைப் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று மாணவனின் பெற்றோரிடம் கூறினேன்.

இன்று சந்தித்த ஒரு நோயாளிக்கு நான்கு நாட்களாகத் தலைவலி. அவர் எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். பரிசோதனை செய்து பார்க்கையில் அவருக்கும் கண்ணாடி அணிய வேண்டியது இருந்தது. இரண்டு கண்களிலும் பார்வைக் குறைபாடு, வலது கண்ணில் இடது கண்ணை விட சற்றே கூடுதலான பவர் வந்தது. அவரும் வலது கண்ணின் கண் பந்தைச் சுற்றிலும் தான் வலி இருக்கிறது என்றார். இவ்வளவு நாள் இல்லையே இப்பொழுது ஏன் தலைவலி வந்திருக்கிறது என்று அவரும் கேட்டார்.

தலைவலிக்கு முதன்மையான காரணம் கண் குறைபாடாக இருந்தாலும், கூடவே கர்ப்ப காலத்தில் நடக்கும் சில உடலியல் மாற்றங்கள், ரத்த சோகை, தூக்கமின்மை இவையும் அவரது தலைவலிக்குக் காரணமாக இருக்கலாம். கண்ணாடியை அணிந்தால் சுமார் 70% பிரச்னை தீர்ந்து விடக்கூடும். அதன் பின்னும் தலைவலி தொடர்ந்தால் வேறு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறினேன்.

பரபரப்பாக இயங்கும் வயதில் தலைவலி வரும் பொழுது வேறு சில காரணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். Tension type headache என்று ஒன்று உள்ளது. பரபரப்புடன் இயங்குதல், உண்ணாவிரதம் இருத்தல், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசித்தல் இது போன்ற நேரங்களில் இந்தத் தலைவலி ஏற்படும். ‘மண்டையைப் போட்டுக் குழப்பாதே!’ என்பார்களே பெரியவர்கள், அது போல் அதிகமாக யோசிக்கும் நேரங்களில் தலையைச் சுற்றிலும் வலிக்கும். இறுக்கமான உணர்வு இருக்கும். ஏதோ ஒன்று தலையைப் பிடித்து அழுத்துவது (squeezing) போல் இருக்கும். சிலர் ஒரு துண்டையோ கைகுட்டையையோ நெற்றியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு தலையைப் பிடித்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது இந்த வகைத் தலைவலியாக இருக்கலாம்.

ஒரு கண்ணைச் சுற்றிலும் எரியும் தன்மையுடன் ஏற்படும் ஒரு வலி சிலருக்கு ஏற்படலாம். கூடவே கண்ணின் பக்கவாட்டில் காதுக்குச் சற்று மேலே ‘temple’ பகுதியில், (சரியாக சொல்லப்போனால் திரைப்படங்களில் வில்லன் நாயகனின் தலையில் பக்கவாட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்துவாரே, அந்த இடத்தில்) வலி தோன்றலாம். மது, போதைப் பழக்கம் இந்தத் தலைவலியைத் தூண்டி விடக்கூடும். இதற்கு Cluster headache என்று பெயர்.

இப்பொழுது என்னுடைய தலைவலிக்கு மீண்டும் வருவோம். எப்படி சிறுவர்கள் வளர வளர அவர்களது கண் பந்தின் நீளம் வளர வாய்ப்பிருக்கிறதோ அதேபோல 40 வயதில் தொடங்கும் வெள்ளெழுத்து பிரச்னை (presbyopia) சீராக அதிகரித்தபடியே இருக்கிறது. நாற்பது வயதில் +1.00 அளவிலான கண்ணாடி தேவைப்பட்டால், சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை +0.50 DSph அதிகரித்து 55 வயதில் +2.50 என்ற அளவில் நிலை பெறுகிறது. கண் பந்திற்குள் அமைந்திருக்கும் லென்ஸ் தனது நெகிழ்வுத் தன்மையை இழந்து விடுவதால் ஏற்படுவதுதான் வெள்ளெழுத்துக் குறைபாடு (presbyopia) என்று நமக்குத் தெரியும்.

வயது ஏற ஏற, அந்த நெகிழ்வுத் தன்மை இன்னுமே குறைகிறது. நான் கண்ணாடி அணிந்த புதிதில் அதை மறந்து வீட்டில் வைத்து விட்டுப் போனால் பெரிய பிரச்னைகள் எழுந்ததில்லை. நாள் செல்லச் செல்ல கண்களைச் சுருக்கிப் பார்க்க வேண்டிய அவசியம் அதிகம் ஏற்பட்டு விட்டது. கூடவே அன்றைய தினத்தின் அலைச்சல், தண்ணீர் சரியாக குடிக்காதது, சீக்கிரமாகப் போய்விட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டுமே என்ற மனப்பதட்டம் எல்லாமாகச் சேர்ந்து தான் எனக்குத் தலைவலி வந்திருக்கிறது என்பது எனக்கு மறுநாள்தான் புரிந்தது!

இனி அவசரமாக ஒரு இடத்திற்கு சென்று வருவது போல் திட்டமிடக் கூடாது, நிறைய தண்ணீர் கொண்டு போக வேண்டும், முடிந்தால் ‘வாட்டர் அலாரம்’ வைத்துத் தண்ணீர் குடிக்க வேண்டும், மிக முக்கியமாக மூக்குக் கண்ணாடியை மறந்து விடக்கூடாது என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன். எதற்கும் இருக்கட்டும் என்று புதிதாக ஒரு மூக்குக் கண்ணாடியை வாங்கிக் கைப்பையிலேயே நிரந்தரமாக வைத்துக் கொண்டேன்! ஏனெனில் இவையெல்லாம் தடுக்கக்கூடிய காரணிகள். ஓரிருமுறை தலைவலி வந்தபின் அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவதிப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்தானே!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.

Tags : Akilanda Bharti ,
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!